Tuesday, October 21, 2014

சத்தியத்தின் பாதை

அநியாயத்திற்கும், அசத்தியத்திற்கும்
ஆதரவளிக்கும்
அல்லது-
அவைகளை
அலட்டிக் கொள்ளாது அங்கீகரிக்கும்
அற்பர்கள் இருக்கும் வரை;

சத்தியத்தின் பாதை
கரடு முரடான
முட்கள் நிறைந்த
நெடும் பாதையாகவே இருக்கும்.

நீ தனித்திருப்பாய்
சத்தியம் உன் கல்பிலிருக்கும்
அசத்தியம் விலகிருக்கும்
விரோதிகளின் கல்பிலிருக்கும்

சத்தியத்திற்கு சாவு கிடையாது
உலகே உன்னை குறை சொன்னாலும் கூட

Wednesday, August 13, 2014

உன்னைச் சாறு பிழியும் வரை

சத்தியம் மட்டும் பேசு,
சத்தியத்திற்காகப்பேசு,
நீதியின் பக்கம் நில்;
நீ தனித்துப் போனாலும் சரியே.

அநியாயம்
அரிச்சந்திரன் செய்தாலும்
நியாயமாகாது.
சத்தியம் ஜெயிக்கும்
காலம் தாமதித்தாலும் சரியே.

அநியாயம், அக்கிரமம்,
ஆண்டவன் விரும்பாதது.

இரு முகம்
நயவஞ்சகனுக்குரியது
உனக்குரியது அல்ல.

உன்னைச் சாறு பிழியும் வரை
உன்னிடம் உரசும்
உறவின்/ நட்பின்  பெயரில்
இரு முகம் காட்டும்
மிருகங்களை விட்டும்
தூர விலகு.

கூட இருந்து குழி பறிக்கும்
நயவஞ்சகர்களுடன்
வாழ்வதை விட
நாலு கால் மிருகங்களுடன்
வாழ்வது மேல்.


Monday, August 4, 2014

காதல்!

உறவுகளை உடைத்து,
உணர்வுகளை தகர்த்து,
உடமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்,
காதல்!
-யாரோ 



பதில் கவிதை 

உறவு
உறவுகளை அரவணைத்து
உணர்வுகளை மதித்து
உடமைகளை பாதுகாத்து
உண்மைகளை ஏற்று
உலகை விழிப்புடன்
சவாலாக தாங்கும்
உறவு தான் ஜெயிக்கும்!
-என் கருத்து, நான் ஏற்ற கருத்து


அன்றைய முஹர்ரம் மாதத்தின்
ஸுப்ஹின் அதான்தான்
அந்த நெருப்புச் செய்தியை
என்னிடம் -
கொண்டு வந்தது.

ஏன் தாயகத்தின்
மஸ்ஜிதுச் சுவர்களின்
ஈழ வெறியாட்டம்
இறையடியார்களின் இரத்தத்தால்
எழுதப்பட்டிருப்பதை கேள்விப்பட்டு
நான் -
புறப்பட்டுச் சென்ற போது
அஜ்மல் என்ற மலரும்
வெறியாட்ட வேகத்தில்
துப்பாக்கிகளால் கிழிக்கப்பட்டதாய்
அன்றைய அதிகாலைக் காற்று
அறிவிப்புச் செய்தது.

அஜ்மல் -
ஆயுதங்களைப் பற்றி
அகரமே அறியாதவன்:
அல்லாஹ்வைத் தொழவே
பள்ளிக்குச் சென்றான்,
அவன்தான் -
அசத்தியத்தை, அநியாயத்தை,
கொடூரத்தை, கொலைகளை
போராட்டமாய்க் கொள்கின்ற
ஈழப் போராட்ட வெறியர்களால்
இரத்த வெள்ளத்தில்
இறந்து போனான்.

ஸுப்ஹானல்லாவைச் சொல்லி
ஸுஜுதில் அந்தப் பிஞ்சு
தன் நெற்றியைப் பூமியில்
ஊன்றி உரசும்போது
ஈழப்புலிகள் என்ற,
வெறியாட்ட நாய்கள்
அந்தப் பிஞ்சின் இரத்தத்தால்
போராட்ட வெறியைத்
தீர்த்துக்கொண்டார்கள்.

அந்தப் பிஞ்சின்
நெஞ்சத்து இரத்தம் -
சுதந்திரத்தின் பெயரால்தான்
ஓட்டப்பட்டிருக்கிறது.

அல்லாஹ்வின் முன்னர்
சிரம் தாழ்த்தும் போது
எவரோ
பட்டாசு சுடுவதாய்
அவன் நினைத்திருப்பான்
புதினம் பார்க்க அவன்
துடியாய்த் துடித்திருப்பான்;
ஆனால் -
அல்லாஹ்வின் முன்னென்பதால்
அடங்கியிருந்திருப்பான்.
அவனையே
வெறி நாய்கள்
வேட்டையாடின..!

அவனோ,
வாப்பா, நானா, தம்பி,
மச்சான், மாமா என்று
ஒவ்வொருவராக
அழைத்த போது,
அவர்களெல்லாம்
அவன் முன்னாலேயே
இரத்த வெள்ளத்தில்
மிதந்து கொண்டிருந்தார்கள்.
"அல்லாஹ்" என்று
அவன் அலறிய சப்தத்தில்
அவனும்,
இரத்த வெள்ளத்தினுள்
மூழ்கிப் போனான்...

ஓர் நாள்
உமர் முக்தாருடன்
ஓன்றிருந்த சிறுவன் பற்றி,
அவன் விசாரித்தது
இன்னுமே எனக்கு
நினைவிருக்கின்றது,
அர்த்தமோ
இன்றுதான் புரிந்தது.

அஜ்மலின் தோழர்களின்
பிஞ்சு உடல்கள்
பள்ளிவாசல் மூலையில்
அவனைச் சூழ்ந்திருந்தன,
அவனின்
ஆத்ம நண்பனின் மூளை
பக்கத்துச் சுவரில் ஒட்டியிருந்தது;
மற்றைய நண்பனின்,
வயிற்றுப் பகுதிகள்
இறைச்சித் துண்டுகளாக
பள்ளியெங்கும்,
பரவிக் கிடந்தன!

விளையாடப் போவதுபோல
பள்ளிக்குத்
துள்ளிச் செல்லும் பிஞ்சுகள்,
துப்பாக்கிகள் பேசும் இரவுகளிலும்
ஊரெல்லாம் -
இருளில் உறங்கும்போதும்
பாங்கு சொன்னதும்
இப்பிஞ்சுகள் பள்ளிக்கு
புறாக் கூட்டமாய்பறந்து விடுவார்கள்
அங்கு
அபயம், அருள்
அளவின்றிக் கிடைக்கும்
அவர்கள் அறிந்தவை
இவைகள் மட்டும்தான்.

அந்தப் பிஞ்சுகளின் இரத்தத்தால்
கோலமிடப்பட்ட சுவர்கள்,
ஆவர்களைத் துளைத்து சன்னங்கள்
துளைத்துச் சென்ற சுவர்கள்
அப்புனித இரத்தங்களால்
குளிப்பாட்டப்பட்ட நிலம்,
இவையெல்லாம் -
காலா காலமாய்க் காக்கப்படும்.
நாளை வருகின்ற பாலகனுக்கு
அவனின் தாய் -
பாலூட்டும்போதே இதைச்
சொல்லிக் கொடுப்பாள்.
அவர்கள் -
தம் அண்ணன்மார் அடைந்த
அருள்களுக்காக
ஆசைப்படுவார்கள்.

காத்தான்குடியின்
கறுப்பு வெள்ளிக்கிழமை
ஒரு கனாவைப் போல்
கலைந்து போகாது.!
ஒரு சூரியனைப் போல்
சுட்டுக்கொண்டேயிருக்கும்.

மீண்டும் -
அஜ்மலும், குட்டித் தோழர்களும்
சத்தியத்தின் கொடியுடன்
சமூகமளிப்பார்கள்.
அன்று
சத்தியம் நிலைக்கும்
அசத்தியம் அழியும்;
அசத்தியம்
அழிந்தே தீரும்.


(காத்தான்குடியின் மஸ்ஜிதில் 3-8-90 அன்று 
எல்.ரீ.ரீ.ஈ  நடாத்திய 
பாசிச வெறியாட்டத்தில்
தன் 16 உறவினர்களுடன் ஷஹீதாகிய 
பத்து வயதுத் தம்பி அஜ்மல் ஷரீப்தீனின்  நினைவாக..)


ஜன்னாவில் உன்னோடு….

azharகடந்த 10ம் திகதி ஜனவரி 2014 ஓட்டமாவடியில் 
மாரடைப்பினால் மரணமடைந்த 
ஸ்மைல் நிறுவனத்தின் ஸ்தாபக உறுப்பினரும்,
சுகாதார வைத்திய அதிகாரியுமான 
தனது நண்பர் டாக்டர் ஏ.எம்.அஸ்ஹர் அவர்கள் பற்றி 
ஸ்மைல் நிறுவன ஸ்தாபகர் 
கலாநிதி அலவி ஷரீப்தீன் அவர்களால் 
எழுதப்பட்ட கவிதை
ஜன்னாவில் உன்னோடு….

என் தோழனே!
விடியல் தேடிய
எம் பயணத்தில்
எமை விட்டும் எங்கு போனாய்?
நடுநிசியின்
ரயில் பயணத்தில்
அரை மரண நிசப்தத்தில்
அலறியடித்த டெலிபோன்
காதைப் பிளந்து சொன்னது
நீ எம்மை விட்டு
பிரிந்து சென்று விட்டாய் என்று…
என் தோழனே !
உன் அமைதியில்
சலனமற்ற நிதானத்தில்
ஆர்ப்பரிப்பு, ஏச்சு பேச்சுக்களை
கருணைக் கண்களினால்
கருக்கிய அபாரத்தைக் காட்டினாய்.
என்பட்டப் படிப்புக்கள்
புகட்டாத பாடத்தை புகட்டினாய்
என் சகோதரனே
வார்த்தைகளை உணர்வுகள்
வார்த்தெடுக்காது என்பது
உன் பிரிவுபற்றி எழுத முடியாது
என் பேனா துடித்தபோது தான்
தெரிய வந்தது.
முழுமாத கர்ப்பிணி
தன் குழந்தையை பிரசவிக்க முடியாத
வேதனையைத் தந்தாய்…
என் தோழனே !
என்னை உன்
புன்சிரிப்பால் வரவேற்பாய்,
தோள் கொடுப்பாய் என்ற கனவில்
கடல் கடந்து வந்தேன்.
மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு வந்து
உன்னை
பிரேத அறையில்
பார்க்கச் சொன்னார்கள்.
துடித்துப் போனேன்
நிமிர்ந்த தாடியுடன்
அதே புன்சிரிப்பை பூக்கின்ற உன்
முகத்தோடு என்னை வரவேற்றாய்…
எம்பணியை விடாதீர்கள் என்று
நீ சொன்னதாய்
என்காது சொன்னது.
எம் கிராமத்து கரைகளில்
நசுக்கப்பட்ட
அனாதைகளின் அபலைகளின்
கண்ணீரைத் துடைத்தாய்.
வைத்தியர்களின்
தொலைக்கப்பட்ட கருணையை
பொக்கை வாய்களில் இருந்து
சாட்சி சொல்ல வைத்தாய்…
என் தோழனே !
எம் பொது விழாக்களில்
வறுமைச்சகதியில்
நீ சிக்கித் தவித்த
வாழ்க்கையின் தடயங்களைச் சொல்லி
சேர்ந்து அழவைத்தாய்,
நாமெல்லாம் சேர்ந்து அழுதோம்.
வறுமைக் கொடுமையில்
கல்வியை விடுவோரை
காப்பாற்ற துடிக்கும் என் கனவுகளுக்கு
உயிர் தந்தாய், தோள் கொடுத்தாய்,
மலையாய் எழுந்து நின்றாய்.
நாளை ஜன்னாவில்
அல்லாவின் அருளால்
உன்னோடு நடக்கும் பாக்கியம்
எனக்கும் கிடைக்க வேண்டும்,
அல்லாஹ் எமை பொருத்தருள வேண்டும்…!
கலாநிதி அலவி ஷரீப்தீன்


Posted by Kattankudi Web Community (KWC) on 20/01/2013

ஆகஸ்ட் 3


அனல் கக்கும் 90இன்
ஆகஸ்ட் 3
வருடம் தோறும்
வந்து செல்லும் !
சிரியாவின் சித்திரவதைகள்,
காஸாவின் கண்ணீர்க் கதறல்கள்,
ஈராக்கின் இரத்த வெள்ளம் 
எம் இதயங்களைப்
பிழிந்தெடுத்தாலும்
ஆகஸ்ட் 3 மட்டும்
எம்மை அதிர வைத்துக்
கலக்கி வைக்கும் !

சுதந்திரத்தின் பெயரில்,
போராட்டம் என்று சொல்லி 
கண்ணியக் காவியத்தைக்
களங்கப்படுத்தி 
குமர் தாத்தாமார்களின் 
முன்தானைப் புடவையிலும்
உம்மாமார்களின்
முக்காட்டு முகட்டிலும்
ஈனச் செயல்கள் எழுதப்பட்டதை 
ஆகஸ்ட் 
எடுத்துச் சொல்லும் !

ஓந்தாச்சி மடத்தில் ஓங்கி அலறிய 
மஹ்ரூப் நானாவின்
அப்பாவி அலறல்கள்
கல்முனையின் காட்டுப்புறத்துக்கு,
விறகு சேர்க்கச் சென்ற
இப்றாஹீம் காக்காவின்
இறந்து போன பைசிக்கல் ;
உன்னிச்சையில் 
கண்டதுண்டமாய் வெட்டி வீசப்பட்ட 
வயல் வேலை செய்த தம்பிமார் ;
பூநொச்சிமுனையில் 
பூண்டோடு பிடுங்கப்பட்ட
மினாறாவின் அடித்தளங்கள் ;
தாராபுரத்தில்.. தம்பலகாமத்தில்..
கிண்ணியாவில்..கீச்சான் பள்ளத்தில்
மூதூரில், முல்லைத்தீவில்
முஸ்லிம் என்பதற்காக 
பால்மனம் மறக்காத பாலகர்கள்
குற்றம் தெரியாத குடுகுடு ஆச்சிமார்
போராட்டம் என்று 
பெயர் போட்டுக் கொண்ட
பொறுக்கிப் பயல்களின்
வெறியாட்டங்களுக்கு
இரையாகிப் போனதை
இந்த ஆகஸ்ட் 
மீண்டும் கிளறி 
எம் சிந்தையைச் சீண்டி எடுக்கும் !

எம் வீட்டு அயலில்;,
எம் முற்றத்து ஒரங்களில் சேர்ந்திருந்து
எம்மிடம் நீர் அருந்தி 
எம் உதவியோடு உண்டு வாழ்ந்தவர்கள்,
கெப்டன்கள் லெப்டினன்கள் என்று
ஒரு இரவில் பெயர் மாறி,
வளர்த்த கடா மார்பில் பாய்ந்த
கர்மக் கதையைக்
கறை படிய விட்டார்கள்
தமிழ் முஸ்லிம் உறவைக்
கறுப்பாக்கி விட்டார்கள் !

செல்வராசா மாஸ்டரும் சீனிக் காக்காவும்
சித்திரா அக்காவும், சித்தி ராத்தாவும்
அமலன் அண்ணாவும், அஹ்சன் தம்பியும்
நடராஜா நண்பனும், நிசார் மச்சானும்
ஒரே கூரையின் கீழ்
ஒன்றாய் இருந்து பெருநாள் உண்டதை
வரலாற்றின் கனவாய்
வடித்து வைத்தார்கள் !

தீபாவளி நாட்களில் 
சிவராத்திரி இரவுகளில்
பொங்கல் நாட்களில்
பொங்கிய பாசங்களைப்
பொசுக்கிய சோகத்தை 
அதன் அகோரத்தை
ஆகஸ்ட் 
அமைதியாய்ச் சொல்லும் !

மியான் குளத்தில் 
மஹ்மூது சாச்சாவும் 
அடுத்த புத்திஜீவிகளும்
இனவெறி கண்ணிவெடிக்குள்
கலைந்து போனதும்
என் சாச்சி பிள்ளைகள்
கலங்கி நின்றதும்
கண் முன்னே வரும் !

வயிற்றுப் பசியில்
பொட்டணி கட்டிச்சென்ற 
பக்கத்து வீட்டு அச்சியின் குழந்தைகள் - 
காலாகாலமாய் கதறிய கதறல்கள்
காது நிறைய ஒலிக்கும்.
எமது - 
ஹுஸைனியா மஸ்ஜிதின் 
புறாக்கூட்டச் சிறார் கூட்டம் - 
மஸ்ஜிதின் மூலை யெங்கும்
வெறி கொண்ட வேங்கை
எனும் கோழைகளால் 
குதறப்பட்டு கொல்லப்பட்டதை
வெந்த புண்ணில் வேலாய்
குத்திக் காட்டும் !

ஸஜ்தாவிலும் ருக்கூவிலுமாய்
கூனிக்குறுகியிருந்த கூன் பிறையின்
இறை நேசக்கூட்டம்
இரக்கமில்லா இனவெறியர்களின்
நரமாமிச வேட்டைக்குப்
பலியாகிப் போன சோக காவியத்தை
இந்த ஆகஸ்ட் 
அன்று
மீண்டுமொரு ஆகஸ்ட் 
வரக்கூடாதென்று சொல்லி நிற்கும்!

இனவெறி பேசி
இரத்த வெறியில்
ஏராளமான 
அப்பாவி உயிர்களை
காவு கொண்ட
முள்ளிவாய்க்கால் வாசிகள்
பல ஆயிரம் தடவைகள்
நொறுக்கப்பட்டாலும்,
ஓந்தாச்சிமடத்தின்
ஓலங்களைப் பார்த்து 
எம் ஊர்ப்பள்ளியில்
எம் உடன் பிறப்புக்கள்
இரத்த வெள்ளத்தில்
துடித்ததைப் பார்த்து
பட்டாசி கொழுத்தி 
கைகொட்டிச் சிரித்த
கரிகாலன்கள்
காலா காலமாய்
கண்றாவியாய்
அழுந்திச் செத்தாலும்
எமதூர் மூலையில் 
பொக்கை வாய்ப் புலம்பல்கள்
தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
கடத்தப்பட்ட மகனை 
வெட்டப்பட்ட வாப்பாவை
அரியப்பட்ட ஆச்சியைப் பற்றி
பேசிக் கொண்டேயிருப்பர்

வரலாற்றில் வேர் பதித்த
தமிழ் முஸ்லிம் உறவை அழித்து
தன்தாய் தாலி அறுத்து
தமிழீழம் என்ற பெயரில்
வெறியுலகை விதைக்கப்பார்த்த
வெறியர்கள் அழிப்பட்டதை-
கொலையுலகு நிலைக்காது
சத்தியம் ஜெயிக்கும்
என்று 
இந்த ஆகஸ்ட் 
அடித்துக் சொல்லும்!


கலாநிதி செய்யித் அலவி ஷரீப்தீன்
03-08-2014