Monday, August 4, 2014

ஜன்னாவில் உன்னோடு….

azharகடந்த 10ம் திகதி ஜனவரி 2014 ஓட்டமாவடியில் 
மாரடைப்பினால் மரணமடைந்த 
ஸ்மைல் நிறுவனத்தின் ஸ்தாபக உறுப்பினரும்,
சுகாதார வைத்திய அதிகாரியுமான 
தனது நண்பர் டாக்டர் ஏ.எம்.அஸ்ஹர் அவர்கள் பற்றி 
ஸ்மைல் நிறுவன ஸ்தாபகர் 
கலாநிதி அலவி ஷரீப்தீன் அவர்களால் 
எழுதப்பட்ட கவிதை
ஜன்னாவில் உன்னோடு….

என் தோழனே!
விடியல் தேடிய
எம் பயணத்தில்
எமை விட்டும் எங்கு போனாய்?
நடுநிசியின்
ரயில் பயணத்தில்
அரை மரண நிசப்தத்தில்
அலறியடித்த டெலிபோன்
காதைப் பிளந்து சொன்னது
நீ எம்மை விட்டு
பிரிந்து சென்று விட்டாய் என்று…
என் தோழனே !
உன் அமைதியில்
சலனமற்ற நிதானத்தில்
ஆர்ப்பரிப்பு, ஏச்சு பேச்சுக்களை
கருணைக் கண்களினால்
கருக்கிய அபாரத்தைக் காட்டினாய்.
என்பட்டப் படிப்புக்கள்
புகட்டாத பாடத்தை புகட்டினாய்
என் சகோதரனே
வார்த்தைகளை உணர்வுகள்
வார்த்தெடுக்காது என்பது
உன் பிரிவுபற்றி எழுத முடியாது
என் பேனா துடித்தபோது தான்
தெரிய வந்தது.
முழுமாத கர்ப்பிணி
தன் குழந்தையை பிரசவிக்க முடியாத
வேதனையைத் தந்தாய்…
என் தோழனே !
என்னை உன்
புன்சிரிப்பால் வரவேற்பாய்,
தோள் கொடுப்பாய் என்ற கனவில்
கடல் கடந்து வந்தேன்.
மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு வந்து
உன்னை
பிரேத அறையில்
பார்க்கச் சொன்னார்கள்.
துடித்துப் போனேன்
நிமிர்ந்த தாடியுடன்
அதே புன்சிரிப்பை பூக்கின்ற உன்
முகத்தோடு என்னை வரவேற்றாய்…
எம்பணியை விடாதீர்கள் என்று
நீ சொன்னதாய்
என்காது சொன்னது.
எம் கிராமத்து கரைகளில்
நசுக்கப்பட்ட
அனாதைகளின் அபலைகளின்
கண்ணீரைத் துடைத்தாய்.
வைத்தியர்களின்
தொலைக்கப்பட்ட கருணையை
பொக்கை வாய்களில் இருந்து
சாட்சி சொல்ல வைத்தாய்…
என் தோழனே !
எம் பொது விழாக்களில்
வறுமைச்சகதியில்
நீ சிக்கித் தவித்த
வாழ்க்கையின் தடயங்களைச் சொல்லி
சேர்ந்து அழவைத்தாய்,
நாமெல்லாம் சேர்ந்து அழுதோம்.
வறுமைக் கொடுமையில்
கல்வியை விடுவோரை
காப்பாற்ற துடிக்கும் என் கனவுகளுக்கு
உயிர் தந்தாய், தோள் கொடுத்தாய்,
மலையாய் எழுந்து நின்றாய்.
நாளை ஜன்னாவில்
அல்லாவின் அருளால்
உன்னோடு நடக்கும் பாக்கியம்
எனக்கும் கிடைக்க வேண்டும்,
அல்லாஹ் எமை பொருத்தருள வேண்டும்…!
கலாநிதி அலவி ஷரீப்தீன்


Posted by Kattankudi Web Community (KWC) on 20/01/2013

No comments:

Post a Comment