அன்றைய முஹர்ரம் மாதத்தின்
ஸுப்ஹின் அதான்தான்
அந்த நெருப்புச் செய்தியை
என்னிடம் -
கொண்டு வந்தது.
ஏன் தாயகத்தின்
மஸ்ஜிதுச் சுவர்களின்
ஈழ வெறியாட்டம்
இறையடியார்களின் இரத்தத்தால்
எழுதப்பட்டிருப்பதை கேள்விப்பட்டு
நான் -
புறப்பட்டுச் சென்ற போது
அஜ்மல் என்ற மலரும்
வெறியாட்ட வேகத்தில்
துப்பாக்கிகளால் கிழிக்கப்பட்டதாய்
அன்றைய அதிகாலைக் காற்று
அறிவிப்புச் செய்தது.
அஜ்மல் -
ஆயுதங்களைப் பற்றி
அகரமே அறியாதவன்:
அல்லாஹ்வைத் தொழவே
பள்ளிக்குச் சென்றான்,
அவன்தான் -
அசத்தியத்தை, அநியாயத்தை,
கொடூரத்தை, கொலைகளை
போராட்டமாய்க் கொள்கின்ற
ஈழப் போராட்ட வெறியர்களால்
இரத்த வெள்ளத்தில்
இறந்து போனான்.
ஸுப்ஹானல்லாவைச் சொல்லி
ஸுஜுதில் அந்தப் பிஞ்சு
தன் நெற்றியைப் பூமியில்
ஊன்றி உரசும்போது –
ஈழப்புலிகள் என்ற,
வெறியாட்ட நாய்கள்
அந்தப் பிஞ்சின் இரத்தத்தால்
போராட்ட வெறியைத்
தீர்த்துக்கொண்டார்கள்.
அந்தப் பிஞ்சின்
நெஞ்சத்து இரத்தம் -
சுதந்திரத்தின் பெயரால்தான்
ஓட்டப்பட்டிருக்கிறது.
அல்லாஹ்வின் முன்னர்
சிரம் தாழ்த்தும் போது
எவரோ –
பட்டாசு சுடுவதாய்
அவன் நினைத்திருப்பான்
புதினம் பார்க்க அவன்
துடியாய்த் துடித்திருப்பான்;
ஆனால் -
அல்லாஹ்வின் முன்னென்பதால்
அடங்கியிருந்திருப்பான்.
அவனையே –
வெறி நாய்கள்
வேட்டையாடின..!
அவனோ,
வாப்பா, நானா, தம்பி,
மச்சான், மாமா என்று
ஒவ்வொருவராக
அழைத்த போது,
அவர்களெல்லாம்
அவன் முன்னாலேயே
இரத்த வெள்ளத்தில்
மிதந்து கொண்டிருந்தார்கள்.
"அல்லாஹ்" என்று
அவன் அலறிய சப்தத்தில்
அவனும்,
இரத்த வெள்ளத்தினுள்
மூழ்கிப் போனான்...
ஓர் நாள்
உமர் முக்தாருடன்
ஓன்றிருந்த சிறுவன் பற்றி,
அவன் விசாரித்தது
இன்னுமே எனக்கு
நினைவிருக்கின்றது,
அர்த்தமோ
இன்றுதான் புரிந்தது.
அஜ்மலின் தோழர்களின்
பிஞ்சு உடல்கள்
பள்ளிவாசல் மூலையில்
அவனைச் சூழ்ந்திருந்தன,
அவனின்
ஆத்ம நண்பனின் மூளை
பக்கத்துச் சுவரில் ஒட்டியிருந்தது;
மற்றைய நண்பனின்,
வயிற்றுப் பகுதிகள்
இறைச்சித் துண்டுகளாக
பள்ளியெங்கும்,
பரவிக் கிடந்தன!
விளையாடப் போவதுபோல
பள்ளிக்குத்
துள்ளிச் செல்லும் பிஞ்சுகள்,
துப்பாக்கிகள் பேசும் இரவுகளிலும்
ஊரெல்லாம் -
இருளில் உறங்கும்போதும்
பாங்கு சொன்னதும்
இப்பிஞ்சுகள் பள்ளிக்கு
புறாக் கூட்டமாய்பறந்து விடுவார்கள்
அங்கு –
அபயம், அருள்
அளவின்றிக் கிடைக்கும்
அவர்கள் அறிந்தவை
இவைகள் மட்டும்தான்.
அந்தப் பிஞ்சுகளின் இரத்தத்தால்
கோலமிடப்பட்ட சுவர்கள்,
ஆவர்களைத் துளைத்து சன்னங்கள்
துளைத்துச் சென்ற சுவர்கள்
அப்புனித இரத்தங்களால்
குளிப்பாட்டப்பட்ட நிலம்,
இவையெல்லாம் -
காலா காலமாய்க் காக்கப்படும்.
நாளை வருகின்ற பாலகனுக்கு
அவனின் தாய் -
பாலூட்டும்போதே இதைச்
சொல்லிக் கொடுப்பாள்.
அவர்கள் -
தம் அண்ணன்மார் அடைந்த
அருள்களுக்காக
ஆசைப்படுவார்கள்.
காத்தான்குடியின்
கறுப்பு வெள்ளிக்கிழமை
ஒரு கனாவைப் போல்
கலைந்து போகாது….!
ஒரு சூரியனைப் போல்
சுட்டுக்கொண்டேயிருக்கும்.
மீண்டும் -
அஜ்மலும், குட்டித் தோழர்களும்
சத்தியத்தின் கொடியுடன்
சமூகமளிப்பார்கள்.
அன்று –
சத்தியம் நிலைக்கும்
அசத்தியம் அழியும்;
அசத்தியம்
அழிந்தே தீரும்.
(காத்தான்குடியின் மஸ்ஜிதில் 3-8-90 அன்று
எல்.ரீ.ரீ.ஈ நடாத்திய
பாசிச வெறியாட்டத்தில்
தன் 16 உறவினர்களுடன் ஷஹீதாகிய
பத்து வயதுத் தம்பி அஜ்மல் ஷரீப்தீனின் நினைவாக..)
எல்.ரீ.ரீ.ஈ நடாத்திய
பாசிச வெறியாட்டத்தில்
தன் 16 உறவினர்களுடன் ஷஹீதாகிய
பத்து வயதுத் தம்பி அஜ்மல் ஷரீப்தீனின் நினைவாக..)
No comments:
Post a Comment