Friday, January 29, 2016

எஸ் ஏ எஸ் மகுமூது என்னருமைச்சாச்சா

26 டிசம்பர் 1992 அன்று 
மியான்குளத்தில்
கண்ணிவெடியில் ஷஹீதாகிப் போன என் சாச்சா
எஸ் ஏ எஸ் மகுமூது அதிபர் நினைவாக...

26 டிசம்பர் 1992 
எனும் 
இருண்ட நாளில்
எஸ். ஏ. எஸ். எனும்
என்னருமை
மகுமூதுச் சாச்சாவை
இழந்து போனேன்..

சுதந்திரத்தின் பெயரைக்
கொச்சைப்படுத்திய
கொலைகாரக் கும்பலின்
கொலை வெறியில்
ஷஹாதத்து வித்தானீர்கள்,
மியான்குளத்தின் அலறல்களால்
ஊரே அதிர்ந்து போயிற்று.

சாச்சா எனும் சொல்லே
உங்களால்தான்
சங்கையாயிற்று..

சொட்டுச் சொட்டாய்
கொஞ்சும் மொழியில்
கட்டியணைத்து
கருணை காட்டினீர்கள்
காக்கா மகனென்று
உங்கள் நண்பர்களிடையே
சொல்லி மகிழ்தீர்கள்.

என் வாப்பா முன்னால்
பெட்டிப்பாம்பாய்;
அடங்கியொடிங்கி
அமர்திருப்பீர்கள்,
அவர்
அறிவுரைகளை
அடிமைபோல் கேட்பீர்கள்.
உங்களால்தான்
காக்கா சொல்லும்
கண்ணியம் பெற்றது.

உங்கள் சைக்கிளில்
பூனைக்குட்டி போல் -நான்
அப்பி இருக்கையில்,
வழியில் காணும்
முகம்மதுவும் முத்துக்குமரனும்
சகோதரர்களே என்ற
கள்ளங்கபடமில்லா
உங்கள் பேச்சுக்கும்,
ஒவ்வொரு சந்தியிலும்
"மாஸ்டர்" என்றும்
"மகுமூது மச்சான்" என்றும்
"சேர்" என்றும்
மாறி மாறி
அன்பர்களால் நீங்கள்
அழைக்கப் பட்டதற்கும்
என் பத்து வயது
சாட்சி சொல்லிற்று.

குறும்புகளின் கோபுர வயதில்
ஓட்டமாவடிப்
பாடசாலைத் தோட்டத்தில்
மரவள்ளிப் பாத்தியில்
காட்டிய குறும்புகளால்,
வம்பில் வசதியாய்
சின்ன மச்சானோடு நானும்
மாட்டிக் கொண்ட போது,
வாப்பாவிடம் மாட்டிக் கொள்ளாமல்
அணை காத்தீர்கள்.

அனாதைகளாய் அல்லலுற்று,
யுத்த முனையில்
நாம் சிதறி இருக்கையில்,
நீங்கள் அகதி முகாமிலிருந்தும்,
உங்கள் காக்கா பிள்ளை எனப்
பதறித்துடித்தீர்கள்.

என் பிஞ்சு வயசில்
அனாதையாகி
சுமக்க முடியாமல்
வலித்த சுமைகளால்;
வாழ்வதா சாவதா
என்றாகி;
குறுக்குக் கோழியாகி
நான் குமுறிய நாட்களில்,
உடுக்கை இழந்து
நடு ரோட்டில்
நான் அலறி அலைகையில்,
கையாலாகாத உறவுகளை
கைகட்டிப் பார்த்திருந்த உலகத்தைக்
கண்டு அழுதீர்கள்,
அல்லாஹ் இருக்கிறான் என
எனக்கு
ஆறுதல் சொன்னீர்கள்.

கண்டவரெல்லாம்
உங்களன்பர்கள்,
படித்தவன், பாமரன்,
ஏழை எழியோர்
உங்கள் உள்வீட்டுப் பிள்ளைகள்,
எவரையெல்லாமோ எங்கிருந்தோ
இழுத்து வந்து
உங்கள் வீட்டில்
ஆதரித்து விருந்தளித்தீர்கள்,
விருந்தோம்பல் செய்தீர்கள்.

விடிவு தேடி - நான்
புலம் பெயர்ந்து,
புலர முன்னர்;
உங்கள் காக்கா மகன்
வித்தாய் மண்ணிலிருந்து
முளை விட முன்னர்,
பள்ளியில் ஷஹீதாய்
வாப்பாவை இழந்த வலியும்
வறுமையின் கொடுமையும்
விலக முன்னர்;
ஒரு
அவுஸ்திரேலிய கோடையிரவில்
அலறியடித்த டெலிபோனில்
கோழைக் கொலைகாரக்
கும்பல்களின்
குண்டு வெடியில் நீங்களும்
ஷஹீதாகிப் போன செய்தி
என் காதைக்கிழித்து
ஈயம் வார்த்து
சுட்டெரித்த போது
இடிந்து போனேன்;
என்னை இழந்து போனேன்.

பின்னொரு நாளில்
துரோகிப் பாவி
பிரபாகரனின் மண்டை
நொருக்கப்பட்ட போது,
அபலைகளின் அனாதைகளின்
அல்ஹம்துலில்லாஹ் துதியில்
அல்லாஹ் என்றும்
அனியாயக்காரர்களை
விட்டு வைப்பதில்லை என்று
அழுது நனைத்து
சுஜூது செய்தேன்.

உங்கள் இழப்பு
எங்களுக்கு சுனாமியானது,
அதனால்தானோ
சுனாமி கூட
டிஸம்பர் 26 ஐ
தெரிந்தெடுத்ததோ?

வாப்பா, மாமா, நீங்களெல்லாம்
இல்லாத நாட்கள்,
நடு ரோட்டில்
நான் நடந்த நாட்கள்,
மிகவும் பொல்லாதவை..!
பாலைவனப் பயங்கரத்தில்
தனித்து விடப்பட்டு,
சுமக்க முடியாத
மூட்டை முடிச்சுகளுடன்
சூறாவளி சுழற்சிக்குள்
மாட்டிக் கொண்ட சோகங்களை;
துரோகணர்களின் துரோகங்களை
யாரிடம் சொல்லியழ?
நீங்களிருந்தால்,
ஓடோடி வந்திருப்பீர்
காக்கா மகனென்று
கட்டியணைத்து
என் கண்ணீர் துடைத்திருப்பீர்.

இதனால்,
அல்லாஹ்வின் அருள் மழையில்
என் சாச்சா நீங்கள்
என்றுமே
நிறைந்திருக்கனும்,
அவை உங்கள் மீது
தொடர்ந்திருக்கனும்.
நாளை மறுமையில்
ஜன்னாவில்
உங்கள் கன்னல் குரலைக்
காது குளிரக் கேட்கனும்;
உங்கள் விரல் பிடித்து
ஜன்னாவின் முற்றத்தில்
உலா வரனும்
துள்ளிக் குதிக்கனும்
ஓடி விளையாடனும்,
என் சாச்சா ஷஹீதென்று
விண்ணதிர முழங்கனும்.

அல்லாஹ் உங்கள் மீது
அளவிலாது அருள் புரியனும் !
ஆமீன்.

கலாநிதி அலவி ஷரீப்தீன்
26 டிஸம்பர் 2015

No comments:

Post a Comment